Translate

Saturday 29 October 2011

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி - இதயச்சந்திரன்


உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி - இதயச்சந்திரன்

பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு மீதான ஆதிக்கம் வலுவடைகிறது. மேற்குலக ஆதரவாளராக இருந்த ஹொஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறையில் தள்ளப்பட்டாலும் இன்னமும் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது.

யேமன் அதிபர் அலி அப்துல்லாசாலே, அதிகாரத்தை ஒப்படைத்தால் அவர் குற்றங்களிலிருந்து தப்பலாம் என்கிற வகையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் அரபுலகில் மேற்குலகின் இராஜதந்திர ஆதிக்கம் மேலோங்கி இருப்பதைப் புலப்படுத்துகிறது.

ஆனால் சிரியா விவகாரம் இன்னமும் மேற்குலகிற்கு சாதகமாக மாறவில்லை. ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிரியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனா, ரஷ்யாவினால் வீட்டோ அதிகாரம் கொண்டு வீழ்த்தப்பட்டதைக் காணலாம். அதேவேளை மேற்குலகு சார்பான லிபிய கிளர்ச்சியாளர்களின் தேசிய இடைக்கால சபையானது, சிரிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சபை ஒன்றினை அங்கீகரித்தது மட்டுமே அவ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரேயரு மாற்றமாகும்.

இந்த வருட இறுதிக்குள் தமது படையினரை முழுமையாக ஈராக்கிலிருந்து அகற்றுவதாக அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருக்கும் அதேவேளை, சிரியா, ஈரான் குறித்து அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், பாதுகாப்புத்துறையின் செலவீனம் அதிகரித்திருப்பது, வீழ்ந்துகிடக்கும் பொருளாதாரத்தை மேலும் பலவீனமடையச் செய்துவிடுமென அமெரிக்கா உணர்கிறது.

கடன் நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், எண்ணெய்வள பிரதேசங்கள் எதிர்த்தரப்பின் கையில் விழுந்து விடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கிறது. இதேபோன்றதொரு சிக்கலான பிரச்சினைகளை ஆசியாவிலும் எதிர்கொள்கிறது அமெரிக்கா.

அதில் தென்சீனக் கடலில் உருவாகும் பதட்ட சூழலைவிட, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் அணிமாற்றங்களையிட்டே மேற்குலகம் கலக்கமடைகிறது. ஒசாமா பின்லாடன் கொலையிலிருந்து தோற்றம் பெற்ற அமெரிக்க - பாகிஸ்தான் முறுகல்நிலை, இந்தியா - ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இதன் எதிர்விளைவாக சீனாவுடனான பாகிஸ்தானின் மூலாபோயக் கூட்டு இறுக்கமடைந்துள்ளதை பக்கவிளைவாகப் பார்க்கலாம். அடுத்ததாக, தென்னாசியாவிற்கான கடல்வழித் தலைவாசலில் அமைந்துள்ள இலங்கை குறித்து மேற்குலகின் பார்வை திரும்புகிறது. மகிந்த மன்னர் இறுதிப்போரை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சீனாவின் ஊடுருவல் இலங்கையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. போர் ஆரம்பித்தவுடன் சத்தமில்லாமல், சீனாவின் நுழைவு அதிகரிக்க இந்தியாவும் மேற்குலகும் அரச ஆதரவு போராட்டக் களத்தில் இறங்கின.

முள்ளிவாய்கால் பேரழிவின் பின்னர் பயங்கரவாதத்தை தோற்கடித்த மகிந்தருக்கு பாராட்டுத் தெரிவித்தவர்கள் இன்று போர்க்குற்ற விசாரணைபற்றி பேசுகிறார்கள். ஆனால், அது குறித்து இந்தியா வாய் திறப்பதில்லை என்பது வேறு விடயம். இருப்பினும் பிராந்திய சமநிலைச் சமன்பாட்டில் சரிவு ஏற்படுவதை உணரும் மேற்குலகம், வைரஸ் கிருமிகள் போல் ஆழ உடுருவும் சீனாவின் செயற்பாடுகளால் சினமடைவதை அவதானிக்கலாம்.

ஒருபுறம் போர்க்குற்ற விசாரணை என்கிற பிரம்பை உயர்த்தியவாறு நின்றாலும், மறுபுறமாக தடைப்பட்ட ஜீ எஸ்.பீ.பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை நீடித்து இலங்கை அரசின் முதுகைத் தடவுகின்றது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வேறுவிதமாக பிரயோகிக்கின்றது. அதேவேளை றொபேர்ட் ஓ பிளேக்கின் ஆலோசனையால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்க வருமாறு அழைத்துள்ள விவகாரம் மகிந்த இராஜதானியில் பதட்ட சூழலை உருவாக்கி உள்ளதை உணரலாம்.

அமெரிக்காவிற்கு அழைக்கலாம் ஆனால் கிலாரியை சந்திக்க அனுமதிக்க் கூடாது என்று மகிந்தர் எச்சரிப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிளேக்கை அடிக்கடி கொழும்பில் சந்திப்பதால், அனேகமாக இராஜாங்க செயலரும், ஒபாமாவிற்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியஸ்தரான கிலாரி கிளிங்டனை கூட்டமைப்பு சந்திப்பு வாய்புண்டு. கூட்டமைப்பின் எம்.பி ஒருவர், அண்மையில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெயிமை சந்தித்த விவகாரம், அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட நாடி பிடித்துப் பார்க்கும் விடயமாகத் தென்படுகிறது.

அதாவது இடைக்காலத் தீர்வொன்றிற்கு இலங்கை அரசு சம்மதித்தால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அமெரிக்கத் தரப்பினர் கூட்டமைப்பினரிடம் கேட்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. இந்த ஊகத்தின் அடிப்படை எரிக் சொல்ஹெய்ம் உடனான சந்திப்பின் பின்னரே உருவானது. இருப்பினும் சிங்கள தேசமும் வாய் மூடி மௌனமாக இந்நகர்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்காது. 
ஐ.நா பொது அமர்வின் மூன்றாவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க அமெரிக்காவிற்குப் புறப்படுகின்றார். அவர் 26ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அதேவேளை கூட்டமைப்பினரும் பான் கீ மூனை பிரத்தியேகமாகச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கூட்டமைப்பிற்கும் அரசிற்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகளால் சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வவுனியாவில் அவர்கள் நடாத்திய உண்ணாநிலைப் போராட்டம் உணர்த்தியது. இவ்வாறான நிலைமையை நீடிக்கவிட்டால் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்கள் மறுபடியும் கிளர்தெழக்கூடிய அறிகுறிகள் தென்படுவதை மேற்குலகம் புரிந்து கொள்வதால் கூட்டமைப்பிற்கு சர்வதேச அளவிலான இராஜதந்திர அந்தஸ்தினை அளித்து இடைக்காலத் தீர்வொன்றினை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதை புதியவொரு அணுகுமுறையாகப் பார்க்கலாம்.

இருப்பினும் இந்தியாவின் ஆதரவுச் சமிக்ஞை இல்லாமல் கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு பயணிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை அரசு வெளியிடப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து, காட்டமான நகர்வுகளை இலங்கை மீது பிரயோகிக்காமல் தவிர்க்கும் அமெரிக்கா, அதற்கிடையில் கூட்டமைப்பை அழைக்கிறது?

மத்தியஸ்தமும், உள்நுழைவிற்கான வாசலைத் திறந்து விடுமென்பதே அதன் உட்பொருளாகும்.

No comments:

Post a Comment