Translate

Wednesday 13 June 2012

தமிழர் தாயகத்தை அடிமைகளின் பிரதேசமாக மாற்ற அரசு முயற்சி; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு


தமிழர் தாயகத்தை அடிமைகளின் பிரதேசமாக மாற்ற அரசு முயற்சி; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு
news
தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ள நவசமசமாஜக்கட்சி, தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித் துள்ளது.
 
மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது எனவும் நவசமசமாஜக் கட்சி குறிப்பிடுகின்றது.
 
யாழ். குடாநாட்டில் இராணுவம் திட்டமிட்ட அடிப்படையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
தமது உரிமைகளை ஜனநாயக விழுமியங்களுக்கமையப் பெற்றுக்கொள்ள முடியாத  அதனை இன்னுமொரு தரப்பு தருவதற்கு மறுக்கும் சந்தர்ப்பத்தில் வன்முறைகளில் ஈடுபட்டே உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நிலைமை தோன்றுகின்றது. அதுதான் பிற்காலத்தில் தீவிரவாதமாக உருவெடுக்கும்.
 
தமிழர்கள் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சாத்வீக வழியில் போராடினர்; காந்திய வழியைப் பின்பற்றினர். ஆனால், சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழர்களை அடக்குவதற்கு முயற்சித்ததே தவிர, உரிமைகளை வழங்குவதற்கு முன்வரவில்லை.
 
அதன் பின்னர் ஏற்பட்ட உருவான ஆயுதப் போராட்டத்தால் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டனர். இரத்த வெள்ளத்தில் சடலங்கள் மிதந்தன. பிணம் தின்னும் மிருகங்களாக அப்போது அரசு செயற்பட்டது. அரசியல் நலன்களுக்காக விலைமதிக்கமுடியாத உயிர்களைக் கூட சர்வதேச சமூகம் கருத்திற்கொள்ளவில்லை.
 
இவ்வாறு பல இன்னல்களைச் சந்தித்த பின்னரும் கூட தமிழர்களின் துயரங்கள் அவல நிலைமைகள் தீரவில்லை. மாறாக, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையிலேயே அரசு ஈடுபட்டுள்ளது.
 
அனைத்தையும் இழந்து நடைப்பிணங்களாய் வாழும் வடக்கு மக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே சொத்து அவர்களது காணிகளாகும். அதைக்கூட இராணுவம் பறிப்பதற்கு முயற்சிக்கின்றது.
 
தமிழீழம் என்றொரு நாட்டைக் கைப்பற்றிவிட்டோம் என்ற ஆணவப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஒரு நாட்டை இன்னுமொரு நாட்டின் இராணுவம் கைப்பற்றிய பின்னர் அந்த நாட்டின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதைத்தான் தற்போது இலங்கை இராணுவம் வடக்கில் செய்கின்றது; இனியும் செய்யப்போகின்றது.
 
தமிழர்கள் இனியும் இல்லையென்ற அளவு பொறுமை காத்து வருகின்றனர். ஆனால், இந்தப் பேரினவாத அரசு அவர்களை சீண்டிவிட்டுப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது. வடக்கு மண்ணை தெற்கின் அடிமைப் பிரதேசமாக மாற்றியமப்பதே மஹிந்த அரசின் சிந்தனையாகும் என்றார்.

No comments:

Post a Comment