Translate

Wednesday 5 September 2012

இவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..? - ஆய்வுக் கண்ணோட்டம்


உலகைக் குலுக்கிய படங்கள் சில�. உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்ற சில சம்பவங்களை விகடன் நிருபரும் புகைப்படவியலாளருமான மகா தமிழ்ப் பிரபாகரன் தொகுத்திருந்தார். அவற்றை ஈழத்தோடு ஒப்பிட்டு பார்க்கின்றேன் நான்.
இவ்வாறு பற்பல நாடுகளில் நடந்தவை அனைத்தும் எம் ஈழத்தில் நடந்தன என்பது யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாதது.

நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!
உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே.. அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின் தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.
ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தளபதி போராளிகளின் கொலை
தம்முயிரை துச்சமென நினைத்து நமக்கென ஒரு நிலம் வேண்டும் என தமிழ் மண்ணுக்காக தத்தம் சந்தோசங்களை தூக்கி எறிந்துவிட்டு தமிழீழமே எம் இலக்கு என எதிரியோடு போராடி, நம் மொழி, நமக்கென ஒரு பண்பாடு கலாச்சாரம், ஒரு கொடி, ஒரு தலைவர் என வளர்ந்து வந்தவேளையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான தளபதிகள் போராளிகள் கொலை செய்யப்பட்டனரே.. இது உலக கண்களுக்கு தெரியவில்லையா?
சேகுவாராவை உள்ளத்திலும் உடையிலும் நினைவுபடுத்துவது போன்றே நம் ஈழப் போராட்டமும் மாவீரர்களும் ஒவ்வொரு தமிழரினதும் இரத்தத்தோடு கலந்து வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு தமிழனும் உலகளாவிய ரீதியில் உணர்வுபூர்வமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்களும் உலக கண்களுக்கு புலப்படவில்லையா..?
போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.  
நிர்வாணக் கோலத்தோடு கதறிய குழந்தையின் படத்தைக் கண்டு உலக நாடுகள் வியட்நாம் போரை தடுத்து நிறுத்தியது பெருமைக்குரிய விடயமே..
இதுபோன்று எத்தனை பச்சிளம்குழந்தைகள், குண்டடிபட்டு தாயின் மடியில் இறந்தனர், கதறினர், மூளைகள் சிதறி, குடல்கள் பிதுங்கி கைகால்கள் சிதைந்து செத்துக்கிடந்தனர், இவை எதுவுமே உலக நாடுகளின் பார்வையில் படவில்லையா? ஈனக் குரல்கள் செவிகளில் கேட்கவில்லையா? அன்று எங்கே போனது உலக நாடுகள்??
வறுமை உடலை கொத்த காத்து நின்ற கழுகு
1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.
முள்ளிவாய்க்கால் போர்�. வன்னிக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு போர் மூண்டு, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த காலம் அது. மக்களுக்கான உணவு விநியோகங்கள்  ஓரிரு  தடவைகள் வழங்கப்பட்ட போதிலும் பெருமளவிலான மக்கள் வரிசையில் காத்திருந்து உணவு கிடைக்காமல், பட்டினி கிடந்த காலமும் அது. போர்ச்சூழலுக்குள் தம்முயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த காலம் அது. பீரங்கிக் தாக்குதலிலும், விமானத்தாக்குதலில் இறந்த சிறுவர்கள் போக, மீதமுள்ள சிறுவர்களும், வயது முதிந்தோர்களும் உணவின்றி செத்து மடிந்தனர். ஆனால் அங்கு காகமோ, கழுகோ இருக்கவில்லை. காரணம் தொடர் வெடிச் சத்தத்தினால் அவை பறந்து போயிருக்கலாம். இல்லை அவைகளும் செத்து மடிந்திருக்கலாம். வெடிச்சத்தம் இல்லையேல் இது போன்று சில கழுகுகள் காத்திருந்திருக்குமோ என்னமோ,,,, ஆனால் சிங்கள இனவெறி சிப்பாய்கள் பார்த்திருந்தார்கள் என்பதுதான் நிஜம். ஆனால் இவற்றைப் பார்த்த மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொரு இதயமும் வெடித்திருக்கவேண்டும். ஆனால் உலக நாடுகள்... மெளனித்திருந்தன.!
கற்பிழந்த இந்திய ஆர்மி !
மணிப்பூர் பெண்களை இந்திய இராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த பெண்களின் நிர்வாணப் போராட்டம் இந்திய இராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்கச் செய்தது.
இந்திய ஆமி மணிப்பூர் பெண்களை கற்பழித்ததால் நிர்வாணப் போராட்டமே நடாத்தி இந்திய ஆமியை கற்பிழக்கச் செய்தது. ஆனால் ஈழத்திலோ  செத்த பெண் போராளிப் பிணங்களை மானபங்கப்படுத்தினர் இலங்கை இராணுவத்தினர். உடைகளை களைந்து கைகள் கட்டப்பட்டு பெண்களை சிதைத்து தம் காமப்பசியை நிவர்த்திசெய்து சுட்டுக்கொன்று குவித்தனர். இவை காணொளிகளாக கூட வெளிவந்திருந்தன. இலங்கை ஆமியின் இக்கொடூரச் செயல் உலக அரங்கிற்கு தெரியவில்லையா? இலங்கை அரசு அவர்களைக் கெளரவப்படுத்தி மேலும் பட்டங்களையும் தகுதிகளையும் வழங்கியதே அன்றி, உலக நாடுகளுக்கு போர்க்குற்றவாளிகளை இன்றுவரை கைது செய்ய முடியாமல் போனதும் ஏனோ?
பிரபாகரன் இல்லை !

"பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், புலிப் பயங்கரவாதம் முற்றாக அழிந்துவிட்டதாகவும் கூறி தமிழ் மக்களின் பிணங்களின் மேல் நடந்தும் இரத்தத்தினால் இனவெறி தாகம் தீர்த்தும் பெரும் வீராப்போடு வெற்றிக் களியாட்டங்களை நடாத்திய இலங்கை அரசுடன் உலக நாடுகளும் சேர்ந்து குத்தாட்டம் போட்டனவே தவிர... தமிழ்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதில்களையும் ஏக்கங்களைத் தீர்க்கும் வல்லமையும் உலக நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு உண்டா...?
ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !
செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.
உலகைக் குலுக்கிய இவ் உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3000 மனித உயிரிழப்புக்கள் நடந்திருக்கலாம். அதுவும் இரு கட்டிடத்தை ஒரு நாள் தகர்ப்பில்� ஒரு கணப்பொழுதில் நடந்த தாக்குதலில்.
ஆனால் 5 மாதமாக தொடர்ந்து நடைபெற்ற யுத்தத்தினால் எத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் (முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட) தினம் தினம் இறந்தார்கள் என உலகத்துக்கு தெரியாதா�? இரு மாவட்டங்களி்ல் நடந்த உக்கிரமான தாக்குதலால் குழந்தைகள் இல்லம், வயோதிபர் விடுதிகள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், குடியிருப்புக்கள் என அனைத்தையும் தகர்த்தும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்று குவித்த சிங்கள அரசு செய்த கொலைவெறி யுத்தம் உலகநாடுகள் ஒன்றுக்குமா தெரியாமல் போனது?
இன்றுவரை தமிழ் இனத்தின் மீதான சித்திரவதைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அதைத் தட்டிக் கேட்காமல் கண்மூடி உறங்குகின்றனவா உலக நாடுகள்?
நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.
கொத்தணிக்குண்டுப் பாவனை�
அணுகுண்டு அளவு இல்லாவிடினும், அதே அளவு  தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. உலகநாடுகளினால் தடைசெய்யப்பட்ட இக்கொத்தணிக் குண்டும், பொஸ்பரசு நச்சுக்குண்டும் பாவிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் போரில். இக்கொத்தணிக்குண்டு வீச்சிலும், பொஸ்பரசு நச்சுக்குண்டிலும் மாண்டோர் பலர். இப்போரினால் மனம் பாதிக்கப்பட்டோர், கைகால், கண் இழந்து ஊனப்பட்டோர், தோல்கருகி மூச்சிழந்து இறந்தோர் என எண்ணிலடங்கா. இவையும் புகைப்படங்களாக வெளிவந்தபோதிலும் எஞ்சியோர் மரணக்குரல் எழுப்பியும் காது கேளாது போல இருந்ததுதானே உலகநாடுகள்.
முள்ளிவாய்க்கால் அழிவையும், தமிழ் மக்கள் மீதான கொடுமைகளையும் கண்ணுக்கு முன்னால் பார்த்த, காணொளிகளில் கண்ட, புகைப்படங்களில் பார்த்த, பிறர் சொல்லக் கேட்ட ஒவ்வொரு தமிழனும் நினைத்தபடி தான் வாழ்ந்துகொண்டு இருப்பான்.
நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனையோடு முடித்துக்கொள்கின்றேன்.
பொம்மி
karu.bomi@gmail.com

No comments:

Post a Comment